Saturday, March 7, 2015

மாற்றத்திற்கு பதிலாக ஏமாற்றம் தரும் ஆம் ஆத்மி கட்சி

எழுபது இடங்களில் அறுபத்து ஏழு இடங்களைப் பிடித்து தேசத்தின் கவனத்தை மட்டுமல்ல சர்வ தேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. ஆனால் அக்கட்சியின் முக்கிய வெற்றியாக நான் கருதுவது அதுவல்ல. இந்த நாட்டில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடி வெள்ளியாக அது தன்னை முன்னிறுத்திக்கொண்டு அம்மக்களின் நம்பிக்கையை பெற்றதுதான் அக்கட்சியின் வெற்றி என நான் எண்ணுகிறேன். தில்லி தேர்தலில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், இசுலாமியர்களும் மிகப் பெருவாரியாக ஆம் ஆத்மியை ஆதரித்திருந்தனர். அது தமது வாழ்வில், இந்திய அரசியலில் ஒரு உண்மையான மாற்றத்தைத் தரும் என நம்பிக்கை வைத்தனர்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சி சில முக்கியமான வகைகளில் ஏமாற்றத்தையே இதுவரை தந்திருக்கிறது என நினைக்கிறேன்.தூய்மையான, வன்முறையற்ற, அறவழி அரசியலையே தாம் முன்னெடுப்பதாக தொடர்ந்து அக்கட்சி பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் தேர்தலுக்கு முன் அக்கட்சி மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சுமார் இரண்டு கோடி ரூபாய் நன்கொடை போலி நிறுவணங்களில் இருந்து அக்கட்சி பெற்றிருந்தது. அதன் பின்னணியை பற்றி விளக்க எதிர் கட்சிகளும், ஊடகங்களும் கோரிக்கை வைத்தன ஆனால் ஆம் ஆத்மி கட்சி அதுபற்றி சரியாக விளக்கம் தராமல் பிற கட்சிகளைப்போல் அந்த நன்கொடை சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்று சப்பையான பதிலையே திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது. கருப்புப் பணத்தை சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி உள்ளே தள்ளியிருக்கிறார்கள் என்பது தெளிவு. யார் அப்படி உள்ளே தள்ளியது என்பது தெளியும் வரை அது அரவிந்த் கேஜரிவாலின் அனுமதியுடந்தான் நடந்திருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது. 

முழுவதும் மக்களின் நன்கொடையிலேயே கட்சி நடத்துகிறோம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்பவர்கள், இப்படி பின்வாசல் வழியாக கருப்புப் பணத்தை உள்ளே கொண்டுவந்திருக்கிறார்கள் என்றால், இவர்கள் சொல்வதைப்போல் அல்லாமல் கட்டாயம் ஊழல் செய்வார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. இரண்டு கோடி பணம் தந்த அந்த பெருந்தகை பிரதி உபகாரம் எதிர்பார்க்காமலா இருப்பார்?

மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் தான் உட்கட்சி ஜன்நாயகத்தை கடைபிடிக்கப் போவதாக ஆம் ஆத்மி வாக்களித்திருந்தது. ஆனால் பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் போன்ற முன்னணித் தலைவர்கள் "உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் எல்லாம் அரவிந்தின் சொல்படியே நடக்கிறது" என ஒரு நேர்மையான குற்றச்சாட்டை வைத்த பொழுது, அரவிந்தின் அடிபொடிகள் கும்பல் சேர்த்துக் கொண்டு அவ்விருவரையும் கட்சியின் முக்கிய அரசியற் செயற் குழுவிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதுபோன்ற சர்வாதிகாரப் போக்கு மக்களிடம் இருந்து பெற்ற நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்துவதன்றி வேறொன்றும் இல்லை. இன்னொரு வழியில் பார்த்தால், அரவிந்த் எப்பொழுதுமே ஒருசர்வாதிகாரத் தன்மை கொண்டவராக இருந்து மக்களிடம் ஆதரவு பெறுவதற்காக மட்டும் ஒரு போலி ஜனநாயக முகமூடியை அணிந்தவராகவே தெரியவருகிறார்.

மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடுவோம் என அடித்தொண்டையில் கத்திய ஆம் ஆத்மிகட்சியின் எம்மெல்யேக்களின் பின்புலத்தைப் பாருங்கள். 

32% பார்ப்பனர்கள்
12% பனியாக்கள்
13% பிற மேல்சாதியினர்
12% சீக்கியர்கள்
5% பிற்படுத்தப்பட்டவர்கள்
16% தாழ்த்தப்பட்டவர்கள்
6% இசுலாமியர்கள்

இவர்கள்தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சமூக, பொருளாதார நீதியை தேடித்தரப்போகிறார்கள். அரவிந்த் இடஒதுக்கீட்டை ஆதரித்தது இன்னொரு தேர்தல் வெற்றிக்கான உத்திமட்டுமே என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எப்படி பிற கட்சிகளுக்கு சாயம் வெளுத்த பின்னர் மக்களிடம் ஆதரவு குறைந்ததோ அதே போல ஆம் ஆத்மி கட்சியும் தமது தனித்துவமான கொள்கைகளை நேர்மையாக கடைபிடிக்காவிட்டால் எவ்வளவு விரைவாக அது வளர்ந்ததோ அவ்வளவு விரைவாக அது காணாமலும் போய்விடும். 

No comments:

Post a Comment