Saturday, March 7, 2015

மாற்றத்திற்கு பதிலாக ஏமாற்றம் தரும் ஆம் ஆத்மி கட்சி

எழுபது இடங்களில் அறுபத்து ஏழு இடங்களைப் பிடித்து தேசத்தின் கவனத்தை மட்டுமல்ல சர்வ தேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. ஆனால் அக்கட்சியின் முக்கிய வெற்றியாக நான் கருதுவது அதுவல்ல. இந்த நாட்டில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடி வெள்ளியாக அது தன்னை முன்னிறுத்திக்கொண்டு அம்மக்களின் நம்பிக்கையை பெற்றதுதான் அக்கட்சியின் வெற்றி என நான் எண்ணுகிறேன். தில்லி தேர்தலில் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், இசுலாமியர்களும் மிகப் பெருவாரியாக ஆம் ஆத்மியை ஆதரித்திருந்தனர். அது தமது வாழ்வில், இந்திய அரசியலில் ஒரு உண்மையான மாற்றத்தைத் தரும் என நம்பிக்கை வைத்தனர்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சி சில முக்கியமான வகைகளில் ஏமாற்றத்தையே இதுவரை தந்திருக்கிறது என நினைக்கிறேன்.தூய்மையான, வன்முறையற்ற, அறவழி அரசியலையே தாம் முன்னெடுப்பதாக தொடர்ந்து அக்கட்சி பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் தேர்தலுக்கு முன் அக்கட்சி மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. சுமார் இரண்டு கோடி ரூபாய் நன்கொடை போலி நிறுவணங்களில் இருந்து அக்கட்சி பெற்றிருந்தது. அதன் பின்னணியை பற்றி விளக்க எதிர் கட்சிகளும், ஊடகங்களும் கோரிக்கை வைத்தன ஆனால் ஆம் ஆத்மி கட்சி அதுபற்றி சரியாக விளக்கம் தராமல் பிற கட்சிகளைப்போல் அந்த நன்கொடை சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்று சப்பையான பதிலையே திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது. கருப்புப் பணத்தை சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி உள்ளே தள்ளியிருக்கிறார்கள் என்பது தெளிவு. யார் அப்படி உள்ளே தள்ளியது என்பது தெளியும் வரை அது அரவிந்த் கேஜரிவாலின் அனுமதியுடந்தான் நடந்திருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது. 

முழுவதும் மக்களின் நன்கொடையிலேயே கட்சி நடத்துகிறோம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்பவர்கள், இப்படி பின்வாசல் வழியாக கருப்புப் பணத்தை உள்ளே கொண்டுவந்திருக்கிறார்கள் என்றால், இவர்கள் சொல்வதைப்போல் அல்லாமல் கட்டாயம் ஊழல் செய்வார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. இரண்டு கோடி பணம் தந்த அந்த பெருந்தகை பிரதி உபகாரம் எதிர்பார்க்காமலா இருப்பார்?

மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் தான் உட்கட்சி ஜன்நாயகத்தை கடைபிடிக்கப் போவதாக ஆம் ஆத்மி வாக்களித்திருந்தது. ஆனால் பிரஷாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் போன்ற முன்னணித் தலைவர்கள் "உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் எல்லாம் அரவிந்தின் சொல்படியே நடக்கிறது" என ஒரு நேர்மையான குற்றச்சாட்டை வைத்த பொழுது, அரவிந்தின் அடிபொடிகள் கும்பல் சேர்த்துக் கொண்டு அவ்விருவரையும் கட்சியின் முக்கிய அரசியற் செயற் குழுவிலிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதுபோன்ற சர்வாதிகாரப் போக்கு மக்களிடம் இருந்து பெற்ற நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்துவதன்றி வேறொன்றும் இல்லை. இன்னொரு வழியில் பார்த்தால், அரவிந்த் எப்பொழுதுமே ஒருசர்வாதிகாரத் தன்மை கொண்டவராக இருந்து மக்களிடம் ஆதரவு பெறுவதற்காக மட்டும் ஒரு போலி ஜனநாயக முகமூடியை அணிந்தவராகவே தெரியவருகிறார்.

மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பெண்ணுரிமைக்காகவும் போராடுவோம் என அடித்தொண்டையில் கத்திய ஆம் ஆத்மிகட்சியின் எம்மெல்யேக்களின் பின்புலத்தைப் பாருங்கள். 

32% பார்ப்பனர்கள்
12% பனியாக்கள்
13% பிற மேல்சாதியினர்
12% சீக்கியர்கள்
5% பிற்படுத்தப்பட்டவர்கள்
16% தாழ்த்தப்பட்டவர்கள்
6% இசுலாமியர்கள்

இவர்கள்தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சமூக, பொருளாதார நீதியை தேடித்தரப்போகிறார்கள். அரவிந்த் இடஒதுக்கீட்டை ஆதரித்தது இன்னொரு தேர்தல் வெற்றிக்கான உத்திமட்டுமே என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எப்படி பிற கட்சிகளுக்கு சாயம் வெளுத்த பின்னர் மக்களிடம் ஆதரவு குறைந்ததோ அதே போல ஆம் ஆத்மி கட்சியும் தமது தனித்துவமான கொள்கைகளை நேர்மையாக கடைபிடிக்காவிட்டால் எவ்வளவு விரைவாக அது வளர்ந்ததோ அவ்வளவு விரைவாக அது காணாமலும் போய்விடும். 

தில்லி தேர்தல் 1

தில்லி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் எழுதத் தொடங்கிய இப்பதிவு இப்பொழுதுதான் வெளிவருகிறது. ஆனால் அதற்குள் ஆம் ஆத்மி கட்சியில் ஏகப்பட்ட குளறுபடிகள். எனினும் அக்கட்சி பெற்ற வெற்றியிலிருந்து தமிழகம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்ற வகையில் இது வெளியிடப்படுகிறது.

இன்னொரு முறை ஆம் ஆத்மி கட்சி தேசத்தின் கவனத்தை தில்லியை நோக்கி திருப்பியுள்ளது. ஆம் ஆத்மியின் அசாத்திய வெற்றி பற்றி பாஜக உட்பட எல்லோருமே மெச்சுகின்றனர். சென்ற இடமெல்லாம் வெற்றிவாகை சூடிய மோதி-ஷா அணியின் தேர்தல் இயந்திரம் தில்லி தேர்தலில் மூச்சு முட்ட போராடத்தள்ளப்பட்டது, மோதியின் எதிர்ப்பாளர்களுக்கு உவப்பளித்திருக்க வேண்டும். இரண்டே ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட, முந்தைய தேர்தலில் மண்ணைக் கவ்விய ஒரு கட்சி, மிகக் குறைந்த பண பலத்தில் எப்படி சக்தி மிகுந்த மோதி-ஷா இயந்திரத்திற்கு இப்படி ஒரு வியக்கத்தக்க போட்டியைத் தந்தது? தேர்தல் என்பது ஓட்டின் விலை ஆயிரமா? ஐயாயிரமா? எனும் அளவிற்கு குறுகிப்போன தமிழகத்திற்கு இதில் ஏதும் பாடமிருக்கிறதா?

சந்தேகத்திற்கு இடமில்லாமல் இது ஒரு மாற்று அரசியல், அதிலும் அதிகாரத்தை கைப்பற்ற திறனுள்ள மாற்று அரசியல் என்பது ஒரு முறையல்ல இரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது. இது இந்தியா முழுவதின் கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது, எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கிய காரணம் அப்படி ஒரு கட்சிக்கான தேவை.

மிகுந்திருக்கும் வன்முறை, பணபலம், அதனால் வளரும் ஊழல் என தற்போதைய அரசியல் வெளி வர இயலாத புதைகுழியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் பணபலமின்றி, வன்முறையின் துணையின்றி தேர்தலை வெற்றி பெருவது இதுவரை ஒரு சாத்தியமில்லாத ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. மக்களின் நலன் சார்ந்த, தூய்மையன அரசியிலின் தேவையை எல்லோரும் உணர்ந்திருந்தாலும் எந்த பிரதான அரசியல் கட்சியும் அதை முன்னெடுக்காததால், வாக்காளர்கள் இருப்பதில் அவர்களுக்கு பிடித்த ஒரு ஊழல்வாத கட்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கத் தள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆட்சிக்குப் பிறகும் தூய்மையான அரசியலின் தேவை அதிகரித்துக் கொண்டே சொல்கிறது ஆனால் அதை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. இச்சூழ்நிலையில்தான் ஒரு பிரதான கட்சி தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் பொழுது, கொள்கை நிலைப்பாட்டையும் தாண்டி மக்கள் பெருவாரியான ஆதரவைத் தந்திருக்கிறார்கள்.

ஆனால் எப்படி இரண்டாண்டிற்கு முன் தொடங்கப்பட்ட ஒரு கட்சி ஒரு முக்கியமான, ஆட்சியை கைப்பற்றும் திறனுள்ள ஒரு கட்சியாக தன்னை மக்களிடம் முன்வைத்தது? இதற்கு அடிப்படையான சிலகூறுகளில் ஒன்று மக்களின் ஆதரவைப் பெறத்தக்க ஒரு எளிமையான செய்தி. இன்னொன்றுஅதை முன்னெடுக்கும் நம்பகத்தன்மைமிக்க தலைமை.கடைசியாக இவ்விரண்டையும் மக்களிடம் எடுத்துச் செல்ல ஒரு தொண்டர்படை. ஆம் ஆத்மி கட்சி ஊழலுக்கெதிரான இந்தியா அமைப்பில் இருந்து பிறந்ததால் இந்த மூன்றுமே தொடக்கத்திலேயே ஓரளவிற்கு கட்சியில் இருந்தது. தொடர்ந்து மூன்று தேர்தல்களை சளைக்காமல் சந்த்தித்தன் மூலம் இம்மூன்று கூறுகளும் கூர்மையும் பலமும் பெற்று கட்சியை வரலாற்றில் இடம்பெறத்தக்க ஒரு வெற்றிக்கு இட்டுச்சென்றிருக்கின்றன. 

ஊழல் எதிர்ப்பு என்பது எல்லா நாடுகளிலும் எல்லா சமயங்களிலும் செல்லுபடியாகம் ஒரு அரசியல் கொள்கைதான். ஊழல் மலிந்திருக்கிறது என்பதை எல்லா நிலையில் உள்ள மக்களும் அன்றாட வாழ்வில் உணர்ந்திருக்கிறார்கள்.  ஒரு ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் தேவை தற்சமயம் அதிகமாகவே இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி கட்சி ”ஊழலை ஒழிப்போம் அதனால் விரயங்கள் தடுக்கப்பட்டு மக்களின் அத்யாவசிய தேவைகளான, கல்வி, மருத்துவம், மின்சாரம் போன்ற அடிப்படையான விசயங்களை மேம்படுத்துவோம்.” என்ற மிக எளிமையான கருத்தை முன்வைத்தது.

இந்த கருத்துக்களை முன்வைத்து பல கட்சிகள் தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன. ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜ்ரிவாலின் மீதிருக்கும் ”நேர்மையாளர்,பல ஆண்டுகளாக மக்களுக்காக போராடி வருபவர்” என்ற பட்டம், ஆம் ஆத்மி கட்சியின் எளிமையான ஊழல் ஒழிப்பு கொள்கைக்கு அதீத வழு சேர்க்கிறது.  அரவிந்தின்  தலைமைப்பண்பின் முக்கிய பங்களிப்பானது நாடு முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை தமது கொள்கைகளை நம்ப வைத்து, ஊக்கமளித்து தமது கட்சியில் சேர்த்ததுதான்.

ஊழல் ஒழிப்பு கொள்கையின் பின்னிருக்க வேண்டிய முக்கிய விசயம் கட்சிக்குத் தேவையான நிதியை பொது மக்களிடம் இருந்து வெளிப்படையாக பெறுதல். பிற கட்சிகள் ஊழல் செய்த பணத்தில் ஒரு பங்கையோ அல்லது ஊழல் முதலாளிகளின் நன்கொடைகளையோ தான் தேர்தல் செலவிற்கு நம்பியிருக்கின்றன. எனவே, அவர்கள் ஊழலை ஒழிப்பது என்பது சாத்தியமில்லாதது.மக்களிடம் நேரடியாக தேர்தல் நிதி பெறுதல் என்பது சிரமமான வேலை மேலும் எவ்வளவு முயன்றாலும் பெருஞ்செல்வத்தை நன்கொடையாக ஈட்ட இயலாது. எனவே  கட்சியின் தலைமையை பற்றியும், கொள்கையை பற்றியும்  மக்களுக்கு எடுத்துச் செல்ல தந்திரமான பிரச்சார உத்திகளை கட்சி கையாள வேண்டும். மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் குறைந்த நிதியே கையிலிருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சிக்கனமாகச் செய்யப்படவேண்டும். ஊடகங்களின் ஒத்தாசை வேண்டும். இங்குதான் தன்னலமற்ற தொண்டர் படை அவசியமாகிறது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் தலைமையை நம்பி நாடு முழுவதிலும் இருந்து பல தன்னார்வலர்கள் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்கள். பாரதிய ஜனதா அளவிற்கு பெரிய ஆள் பலம் இல்லாவிட்டாலும், ஆம் ஆத்மி கட்சியின் தன்னார்வலர்கள் தமது ஆர்வத்தாலும், ஊக்கத்தாலும் கட்சியின் வெற்றிக்கு மிகப் பெரிய பங்களித்திருக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியை முதன்மை ஊடகங்கள் அதிகமாகக் கண்டுகொள்ளவில்லை. அப்பொழுது சமூக வலைத்தளங்களில் தன்னார்வலர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்ததனர். கட்சியின் செயல்பாடுகளை முதன்மை ஊடகங்கள் புறக்கணிக்கின்றன எனவும், அவை பாரதிய ஜனதாவிற்கு சாதகமாக செயல்படுகின்றன என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை பற்றியும் அவற்றை பேச வைத்தனர். தன்னார்வலர்களின் பணி வலையுலகத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஏராளமான் தெரு முனைக் கூட்டங்களை நடத்தினார்கள். 




தன்னார்வலர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால், ஆடல், பாடல், தெருக்கூத்து என அவர்களது பிரச்சாரம் புதுமையாகவும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகவும் அமைந்தது. இத்தனைக்கும் பிரதான தன்னார்வலர்களின் எண்ணிக்கை வெறும் 30,000ம் தான். அதைப்போல ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியை முன்னிறுத்தி அசத்திய சமூக வலைத்தளக் குழுவின் பிரதான உறுப்பினர்கள் 10லிருந்து 20 பேர்தான். 100 இளைஞர்களைக் கொடுத்தால் இந்த நாட்டை மாற்றிக் காட்டுவேன் என ஒரு பெரியவர் சொல்லிச் சென்றார். அரவிந்த் அதை செய்து காட்டியிருக்கிறார்.